Priyanka Mohan – பிரியங்கா மோகன் கிளாமர் காட்சிகளில் நடிப்பாரா?.. இதோ அவரே சொன்ன பதில்
சென்னை: நடிகை பிரியங்கா மோகன் தற்போது வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட ஆரம்பித்திருக்கும் அவர் தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படமானது பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட படமான ஒந்த் கத்தே ஹெல்லா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அடிப்படையில் பொறியாளரான இவர் அவ்வப்போது மாடலிங்கிலும் ஈடுபட்டுவந்ததால் திரைத்துறை கதவு திறந்தது. முதல் படத்தை விக்ரம் குமார் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் பிரியங்கா மோகனின் நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.
தமிழில் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். படம் மெகா ஹிட்டானது மட்டுமின்றி பிரியங்கா மோகனின் நடிப்பும் பலமான வரவேற்பையே பெற்றது. இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.
பிஸி பிரியங்கா: டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். இப்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் விரைவில் டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கைவசம் படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிளாமர்: இந்த சூழலில் பிரியங்கா மோகனிடம் நீங்கள் கிளாமராக நடிப்பீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஓரளவுக்கு மேல் தோலை காண்பித்து நடிக்க எனக்கு விருப்பமில்லை. கவர்ச்சியில் ஒரு எல்லையை மீறக்கூடாது என்ற நோக்கத்தில்தான் நான் நடித்துவருகிறேன். என்னுடைய கதாபாத்திரங்களில் இருக்கும் கிளாமர் யாருடைய முகத்தையும் சுளிக்காத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்” என்றார்.