Pro Kabaddi League 2023: தொடர் தோல்விகளால் தத்தளிக்கும் தமிழ் தலைவாஸ்; கோப்பை கனவு நனவாகுமா?
ப்ரோ கபடி லீக் 10வது சீசன் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் அரையிறுதிக்குச் சென்ற தமிழ் தலைவாஸ் அணி, இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கியுள்ளது.
ஆனால், சென்னையில் நடந்த 3 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் தோல்வியை மட்டும் தழுவியிருக்கிறது. மொத்தம் ஆடிய 7 போட்டிகளில், தமிழ் தலைவாஸ் அணி 3 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் அந்த அணி 11வது இடத்தில் உள்ளது. 11 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் மட்டும் வென்றுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 12 இடத்தில் இருக்கிறது.
முன்னதாக நேற்று சென்னையில் 2 போட்டிகள் நடந்தன. முதலில் விளையாடிய பெங்கால் வாரியர்ஸ், டபாங் டெல்லி போட்டியில் டெல்லி அணி 38 – 29 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்து நடந்த தமிழ் தலைவாஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் இடையான போட்டியில், தொடக்கத்திலேயே ரசிகர்களை ஏமாற்றியது தமிழ் தலைவாஸ் அணி. ஆல் அவுட் எடுத்து லீடிங்குடன் ஆடிய ஹரியானா, ஆட்டம் முழுக்கவே அதே ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. இதற்கும் முதல் பாதியில் தமிழ் தலைவாஸுக்கு லீடிங் எடுக்க வாய்ப்புகள் பிரகாசமாகவே இருந்தன. ஆனால், அது கடைசி வரை நிகழவில்லை.
இரண்டாம் பாதி தொடங்கியதும், ஹிமாணிஷு ஆறுதலுக்காக ஒருபுறம் புள்ளிகள் எடுத்துக்கொண்டு இருக்க, மறுபுறம் டிஃபெண்டர்கள் புள்ளிகளை விட்டுக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அஜிங்கியா பவாருக்கு ஆதரவுக் குரல் எழுந்த அளவுக்கு அவரால் புள்ளிகள் எடுக்க முடியவில்லை. இறுதியில் 29 – 42 என்ற புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.
ஆட்டம் முடிந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் அஷன் குமார் பேசினார். அப்போது, தமிழ் தலைவாஸின் தொடர் தோல்விக்கான காரணம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நாங்கள் எங்கள் ஆட்டத்தைச் சிறப்பாகத்தான் ஆடி வருகிறோம். வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக ஆடி வெற்றி பெறுவோம்” என்றார்.
அடுத்து வரும் குஜராத் ஜெயன்ட்ஸ் உடனான போட்டிக்கான கேம் பிளான் குறித்த கேள்விக்கு, “அவர்கள் டிஃபெண்டிங் ஆட்டத்தை நன்றாக ஆடுவார்கள். அதற்கு ஏற்ற பயிற்சிகளை நாங்கள் எடுப்போம்!” என்றார்.
இன்னும் தமிழ் தலைவாஸ்க்கு 15 போட்டிகள் மீதமுள்ளன. அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், கடந்த முறை கைவிட்ட கோப்பையை இந்த முறை பிடித்து விடலாம். செய்வார்களா?