PSL 2024 – 59 பந்துகளில் சதம் விளாசிய பாபர் அசாம்.. ரசிகர்கள் கிண்டல் செய்த நிலையில் பதிலடி
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் psl t20 தொடரில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் 59 பந்துகளில் சதம் விளாசி அசத்தியிருக்கிறார். ஐபிஎல் பாணியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாபர் அசாம், பெஸ்வார் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபர் அசாமை ரசிகர்கள் சிலர் மெதுவாக விளையாடுவதாக கூறி கிண்டல் செய்தனர். மேலும் ஜிம்பாப்வே போன்ற எளிமையான அணிக்கு எதிராக தான் பாபர் அசாம் ரன் சேர்ப்பார் என்ற வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்தி கிண்டல் செய்தனர்.
அப்போது பாபர் அசாம் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்த போது எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தார். லாகூரில் நடைபெற்ற பெஷ்வார் மற்றும் இஸ்லாமாபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து பெஷ்வார் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அசாம், அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். மற்றொரு தொடக்கவீரரான சயிம் அயூப் 21 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். அவர் மூன்று பவுண்டரிகள் இரண்டு சிக்சர்கள் அடித்தார். இந்த நிலையில் முகமது ஹாரிஸ் இரண்டு ரன்களிலும், ஹசிபுல்லாகான் டக் அவுட் ஆகியும் பால் வால்டர் 19 ரன்களிலும், ரோமன் போவல் 8 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பாபர் அசாம் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறி பிடித்தவர் போல் பாபர் அசாம் பவுண்டரிகளை பறக்க விட்டார். 39 பந்துகளில் பாபர் அசாம் அரை சதம் கடந்த நிலையில் அடுத்த 20 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் 59 பந்துகளில் அவர் சதத்தை கடந்து இருக்கிறார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் பாபர் அசாம் 63 பந்துகளில் 111 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் 14 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். பாபர் அசாமின் ஸ்டிரைக் ரேட் 176 என்ற வகையில் இருந்தது. இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 எண்கள் எடுத்தது.