புதுச்சேரி: அரையாண்டு தேர்வு வளாகத்தில் மத்திய அரசின் விழா! – விகடன் செய்தியால் நேரத்தை மாற்றிய அரசு

புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 8-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைப்பெற்று வருகிறது. அதன்படி இரவு முழுவதும் படித்துவிட்டு, இன்று காலை கடைசி தேர்வை எழுதச் சென்ற, அரும்பார்த்தபுரம் திரு.வி.க அரசு உயர் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.

காரணம் தேர்வு நடக்கும் பள்ளி வளாகத்தில் `நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ (விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா) என்ற மத்திய அரசின் விழாவுக்காக அங்கு மேடையை அமைத்திருந்தது வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம். அத்துடன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், `நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ குறித்தும் ஒலி பெருக்கிகளில் மிகவும் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அத்துடன் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை வரவேற்கும் விதமாக பேண்டு வாத்தியங்களும் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மத்திய அரசின் விழா

அந்த நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்த பயனாளர்களும், தேர்வு அறைகளுக்கு வெளியில் அமர்ந்து கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்ததால், மாணவர்கள் தேர்வெழுத முடியாமல் தவித்தனர். அதையடுத்து விகடனை தொடர்பு கொண்ட மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் படும் சிரமம் குறித்துக் கூறினர். உடனே நம்முடைய விகடன் இணையப்பக்கத்தில் வீடியோவுடன் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அத்துடன் அதுகுறித்து கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். அதற்கு `மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கிறேன்’ என்றார். அதற்கடுத்து விகடனை தொடர்பு கொண்ட வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், நிகழ்ச்சி நேரத்தை மாற்றிக் கொள்வதாகவும், மாணவர்கள் தேர்வு எழுதி முடித்தவுடன் நிகழ்ச்சியை நடத்துவதாகவும் தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *