வெறும் 150 ரூபாய் செலவில் புதுச்சேரி சுற்றுலா – எப்படி?
பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரி என்பது ஆய்வாளர்களின் நகரம் என செல்லமாக அழைக்கப்படுவதுண்டு. ஏனென்றால், மணல் கடற்கரைகள், நினைவுச் சின்னங்கள், பாரம்பரிய வீடுகள் என ஒரு பிரெஞ்சு நாட்டின் கலாச்சார எச்சங்களை எல்லாம் அங்கு காணலாம். சுதந்திரத்துக்கு முன்பு பிரெஞ்சுகாரர்களின் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்த அந்த பகுதி எப்போதும் சுற்றுலா பிரியர்களின் ஹிட் லிஸ்டில் இருக்கும் ஹாட்ஸ்பாட். இந்தியாவில் இருக்கும் வரலாற்று மற்றும் பாதுகாக்கப்பட்ட காலனித்துவ அழகியலின் சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. மேலும், நகரத்தின் சலசலப்புகளிலிருந்து விலகி, அமைதியான சுற்றுலா தளம்.
புதுச்சேரியின் இயற்கை அழகு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அப்படியான அரிய சுற்றுலா பொக்கிஷங்களைக் கொண்டிருக்கும் புதுச்சேரிக்கு நீங்கள் சுற்றுலா சென்றால், வெறும் 150 ரூபாய் செலவில் மிக முக்கியமான 21 சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துவிடலாம். இதற்காக பிரத்யேகமாக மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீங்கள் எந்த பேருந்தில் ஏறி, எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். இதற்கான டிக்கெட் விலை வெறும் 150 ரூபாய் மட்டுமே. 12 மணி நேரம் செல்லக்கூடியது.
இந்த 21 இடங்களையும் சுற்றிப் பார்க்கும் வகையிலும் சிறப்பு பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. அந்த பேருந்து முதலில் பிரெஞ்சு பூங்காவாக நிறுவப்பட்ட தாவரவியல் பூங்கா, சேக்ரட் ஹியர் பசிலிக்கா மற்றும் பாண்டி மெரினா போன்ற பல்வேறு இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கு நீங்கள் பல்வேறு உணவுகளை சாப்பிட்டு மகிழலாம். மணல் கடற்கரைகளை ரசிக்கலாம்.
மூன்றாம் நெப்போலியன் ஆட்சியின் போது கட்டப்பட்ட ஆயி மண்டபம் என்ற புகழ்பெற்ற நினைவுச்சின்னத்திற்கும் பேருந்து உங்களை அழைத்துச் செல்லும். அதேபோல், புகழ்பெற்ற ஸ்ரீ அரவிந்தோ ஆசிரமம், ஸ்ரீ அரவிந்தோ காகித ஆலை மற்றும் கலை மற்றும் கைவினைக் கிராமம் ஆகியவற்றிற்கும் இந்த சிறப்பு பேருந்துகள் செல்லும். நீங்கள் தொல்பொருள் இடங்களை விரும்பினால், அரிக்கமேடு மற்றும் சின்ன வீராம்பட்டினத்தின் அமைதியான கடற்கரையையும் பார்த்து ரசிக்கலாம்.
சுன்னம்பார் படகு இல்லம், ஸ்ரீ சிங்கிரிக்குடி நரசிம்மர் கோயில், திருக்கஞ்சி, வில்லியனூர் தேவாலயம் மற்றும் வில்லியனூர் திருகாமேஸ்வரர் கோயில் ஆகியவையும் இந்த சுற்றுலா பட்டியலில் இருக்கும் புகழ்பெற்ற இடங்கள். இது தவிர, சிறப்பு பேருந்து உங்களை ஒசுடு ஏரி, ஆரோவில் மாத்ரிமந்திர், ஆரோவில் கடற்கரை, காமராஜ் மணிமண்டபம், அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை வந்தடையும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பேருந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்த சுற்றுலா இடங்களுக்கு செல்லும் எந்த பேருந்தில் வேண்டுமானாலும் நீங்கள் ஏறி இறங்கிக் கொள்ளலாம்.