மலர் சாகுபடியில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் புனே பெண்!
எவ்வளவோ தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதும் இன்றும் இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த காலங்களில் கிராமத்தில் உள்ள விவசாயிகள் மட்டுமே விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் நிறைய நிலம் இருந்ததோடு படிப்பறிவு இல்லாதவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஐடி துறையில் கை நிறைய சம்பளம் வாங்குபவர்கள் முதல் குடும்பத்தலைவிகள் வரை அனைவரும் நவீன விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் புனேவைச் சேர்ந்த ஸ்வாதி கேந்திரே என்ற பெண்ணும் ஒருவர். ஆரம்பத்தில் பாரம்பரியமான விவசாய முறைகளையே பின்பற்றி வந்த ஸ்வாதி, தற்போது தனக்கு சொந்தமான 30,000 சதுர அடி நிலத்தில் நவீன விவசாய முறையில் ஜெர்பரா மலர்களை விளைவித்து வருகிறார். இந்த மலர்களை விற்பனை செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார்.
புனேவின் பாலாவாடி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வாதி, தனது கணவர் அமித் தியானேஸ்வருடன் சேர்ந்து ஜெர்பரா மலர்களை பயிரிட்டு வருகிறார். புனே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் இவரது கணவர் பணப்பயிர்களை விளைவிக்க ஊக்குவித்ததோடு பசுமைக்குடிலையும் (polyhouse) அமைத்து கொடுத்துள்ளார். மேலும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, முறையான களையெடுப்பு, தண்ணீர் மேலாண்மை, இயற்கை முறையிலான பாக்டீரியா உரம் ஆகியவற்றை பயன்படுத்துவதிலும் தனது மனைவிக்கு உறுதுணையாக இருக்கிறார்.
ஜெர்பரா மலர்களுக்கான தேவை எப்போதும் இருப்பதை தெரிந்துகொண்ட தம்பதிகள் இருவரும் இந்த மலர்களை சாகுபடி செய்து விற்க ஆரம்பித்தனர். இதற்காக தங்களுடைய நிலத்தில் 18,000 ஜெர்பரா கன்றுகளை நட்டியுள்ளனர். பயிரிடுவதற்கு முன்பாக ஒன்றரை டன் நெல் உமி மற்றும் 25 லோடு பசுஞ்சாணத்தையும் நிலத்தில் கலந்துள்ளனர். அதன்பின்னர் நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழுதுள்ளனர். தண்ணீர் பாய்ச்சிய இரண்டு நாட்களுக்குப் பிறகு மேடமைத்து பதினெட்டாயிரம் ஜெர்பரா கன்றுகள் நடப்பட்டுள்ளன.
ஸ்வாதிக்கு சிறு வயதிலிருந்தே விவசாயம் மீது கொள்ளைப் ப்ரியம். பல அனுபவங்களுக்குப் பிறகு, நல்ல விளைச்சலும் லாபமும் ஈட்ட வேண்டுமென்றால், பாரம்பரியமான விவசாயத்திற்கு பதிலாக நவீன விவசாய முறைகளை கையாள்வதே சிறந்த வழி என்பதை அவர் கண்டறிந்தார்.
இன்றைய காலத்தில் திருமணம், திருவிழா, பண்டிகை கொண்டாட்டங்கள் போன்றவற்றிற்கு ஜெர்பரா மலர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வருடம் முழுவதும் இதன் தேவை உள்ளது. இது பருவகால மலர் இல்லை என்பதால், வருடம் முழுவதும் சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்ட முடிகிறது எனக் கூறுகிறார் ஸ்வாதி. புனேவில் உள்ள மலர்சந்தைக்கு தினமும் 300 கொத்து ஜெர்பரா மலர்களை அனுப்பி வருகிறோம். சந்தையில் நிலவும் தேவைகளுக்கு ஏற்ப ரூ.20 முதல் ரு.90 வரை விலை வைத்து தம்பதிகள் இருவரும் ஜெர்பரா மலர்களை விற்பனை செய்து வருகின்றனர்