கிரைய பத்திரம்.. தமிழ்நாட்டின் சொத்து வழிகாட்டி மதிப்பு.. அடுக்குமாடி திட்டத்தில் 3000 பத்திரங்கள்?

சென்னை: வழிகாட்டி மதிப்பு உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை, கடந்த வாரம் சென்னை ஹைகோர்ட் ரத்து செய்துவிட்ட நிலையில், முக்கிய பிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளதாம்..
என்ன அது?
கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி, தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக்குழு கடந்தமார்ச் 30ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.
சுற்றறிக்கை: இதையடுத்து, சொத்துகளுக்கான புதிய வழிகாட்டி மதிப்பீடு கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி அமலுக்கும் வந்தது. ஆனால், இந்த சுற்றறிக்கையை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில், கிரெடாய் என்று சொல்லக்கூடிய இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு உள்பட பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தன.
இதனை விசாரித்த ஹைகோர்ட், “சட்ட விதிகளின்படி துணைக்குழுக்களை அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதன்பிறகே வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க இயலும். உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்கிறேன். விதிகளை பின்பற்றி புதிதாக வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். அதுவரை கடந்த 2017-ம் ஆண்டு வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும்” என்றார்.
மாறும் மதிப்புகள்: சுற்றறிக்கையை கோர்ட் ரத்து செய்துவிட்ட நிலையில், எதன் அடிப்படையில் பத்திரப்பதிவு மேற்கொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.. எப்படியும், 2022 ஏப்ரலுக்கு முந்தைய மதிப்புகள் மறுபடியும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது என்றாலும், பதிவுத்துறை அதிகாரிகள் மவுனமாக இருப்பதாகவும், இதனால், பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
சுற்றறிக்கை ரத்தானபிறகு, பத்திரங்களை பதிவு செய்ய சார் பதிவாளர்கள் தயங்குவதாகவும், பொதுமக்களும் எந்த மதிப்பு அடிப்படையில் கிரைய பத்திரங்களை தயார் செய்வது என்பது தெரியாமல் தவிப்பதால், மக்கள் குழப்பத்தை பதிவுத் துறை தீர்க்க வேண்டும் என்றும், இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி ராமபிரபு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
கோரிக்கை: இப்போது மீண்டும் மற்றொரு கோரிக்கையை விடுத்துள்ளார்.. அதில், “உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து பதிவுத்துறை மவுனமாக இருப்பது நல்லதல்ல. இதனால், பல்வேறு வகையான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனை தொடர்பான, 3,000 பத்திரங்கள் காத்திருக்கின்றன. எந்த வழிகாட்டி மதிப்பை ஏற்பது என்பது தெளிவானால், இந்த பத்திரங்கள் அனைத்தும் பதிவுக்கு வரும்.