சிறையில் அடைக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்களை விடுவித்த கத்தார்.. 7 பேர் நாடு திரும்பினர்..
உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்திருந்த 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாக கருதப்படுகிறது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அல் தஹ்ரா குளோபல் கம்பெனி என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களில் 7 பேர் கத்தாரில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர். கடந்த ஆண்டு, அல் தஹ்ரா குளோபல் வழக்கில் கைது செய்யப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் ரத்து செய்தது. மரண தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளது.
கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்திய அரசாங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை கத்தாரின் முதன்மை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
கத்தாரில் கைது செய்யப்பட்ட கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் இந்திய கடற்படை வீரர் ரேஜ் ஆகிய 8 இந்திய கடற்படை அதிகாரிகள் தற்போது நாடு திரும்பி உள்ளனர். மேலும் இந்தப் பிரச்னையில் தலையிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
கடற்படை வீரர் ஒருவர் இதுகுறித்து பேசிய போது “பிரதமர் மோடியின் தலையீடு இல்லாமல் நாங்கள் இங்கு நின்றிருக்க முடியாது. மேலும் இது இந்திய அரசின் தொடர் முயற்சியால் இது நடந்துள்ளது” என்று கூறினார்.
மற்றொரு கடற்படை வீரர் பேசிய போது “நாங்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்கள் காத்திருந்தோம். பிரதமருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவருடைய தனிப்பட்ட தலையீடு மற்றும் கத்தாருடன் சமன்பாடு இல்லாமல் இது சாத்தியமில்லை. இந்திய அரசு மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்திய அரசின் முயற்சிகள் இல்லாமல் இந்த நாள் சாத்தியமில்லை,” என்று கூறினார்.
வழக்கின் பின்னணி என்ன?
கத்தாரில் உள்ள அல் தஹ்ரா என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியர்கள், உளவு பார்த்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில்ஆகஸ்ட் 2022 இல் கைது செய்யப்பட்டனர். இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கத்தார் அதிகாரிகளோ அல்லது புது டெல்லியோ இந்திய குடிமக்கள் மீதான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை..
அக்டோபர் 26, 2023 அன்று கத்தாரின் முதன்மை நீதிமன்றம் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்த இந்திய அரசு, வழக்கில் அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்வதாக உறுதியளித்தது.
மார்ச் 25, 2023 அன்று இந்திய குடிமக்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன, மேலும் அவர்கள் கத்தார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டனர். பின்னர் இந்திய அரசு மேற்கொண்ட தொடர் சட்ட முயற்சிகளால் இன்று இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.