சென்னையில் குவால்காம் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு மையம்; மார்ச் 14ஆம் தேதி திறப்பு விழா

செமிகண்டக்டர் நிறுவனமான குவால்காம் தனது புதிய வடிவமைப்பு மையத்தை சென்னையில் உள்ள ராமானுஜன் ஐ.டி. சிட்டியில் மார்ச் 14ஆம் தேதி திறக்கவுள்ளது. சென்னையில் அமைய இருக்கும் வடிவமைப்பு மையம் வயர்லெஸ் இணைப்புகளில் அதிக கவனம் செலுத்தும் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது இந்தப் புதிய மையத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதனை குவால்காம் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ்டியானோ அமோன் திறந்து வைக்க இருக்கிறார்.

குவால்காம் இந்தியாவின் தலைவர் சாவி சோயின், சென்னை மையத்தின் தலைவர் மகேஷ் மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் சென்னையில் நடக்கும் புதிய மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

சென்னையில் 1,600 தொழில் வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இந்தப் புதிய வடிவமைப்பு மையத்தில் சுமார் ரூ.177 கோடி முதலீடு செய்வதாக குவால்காம் தெரிவித்திருந்தது.

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான குவால்காம் கலிபோர்னியாவின் சான் டியாகோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. குறைக்கடத்திகள், மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

குவால்காம் நிறுவனத்தின் மேம்பட்ட வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்னாப்டிராகன் வரிசை பிராசஸர்களுக்காக மிகவும் பெயர் பெற்றது. பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் சாதனங்களில் இவை முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.

குவால்காம் நிறுவனத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகள் 3G, 4G மற்றும் 5G நெட்வொர்க்குகள் உள்ளிட்ட மொபைல் தகவல்தொடர்பு சேவைகளிலும், வாகனம், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மற்றும் கம்ப்யூட்டிங் போன்ற பிற தொழில்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் நொய்டாவிலும் குவால்காம் மையங்கள் உள்ளன. நாடு முழுவதும் சுமார் 17,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *