விட்டாச்சு லீவு! இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை! ஜன.2ம் தேதி பள்ளிகள் திறப்பு
அரையாண்டுத் தேர்வு நேற்று முடிந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற 1-5, மற்றும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு டிசம்பர் முதல் மற்றும் இரண்டாம் வாரத்தில் அரையாண்டுத் தேர்வுகளைப் பள்ளிக் கல்வித்துறை நடத்தியது. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழை காரணமாக விடுமுறை விடப்பட்டது. எனவே இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
அதேபோல தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை வெள்ளம் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மற்ற நாட்களில் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று முதல் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விடுமுறை நாட்களில் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் 10, பிளஸ் 2 மாணவர்கள் விரும்பினால் அவர்களுக்காக வகுப்பு நடத்தலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இன்று தொடங்கி ஜனவரி 1ம் தேதிவரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. ஜனவரி 2ம் தேதி வழக்கம் போலப் பள்ளிகள் தொடங்கும்.