திருப்பதியில் ரதசப்தமி ஏற்பாடுகள் தீவிரம்… கோயிலை ஆய்வு செய்த எஸ்.பி..!

திருப்பதியில் இம்மாதம் 16ஆம் தேதி ரதசப்தமி தினம் ஆகும். அன்றைய தினம் காலை தொடங்கி இரவு வரை ஏழுமலையானின் ஏழு விதமான வாகன புறப்பாடுகள் திருப்பதி மலையில் உள்ள மாட வீதிகளில் நடைபெறும். ஒரே நாளில் ஏழுமலையானின் ஏழு வாகன புறப்பாடுகள் நடைபெறும் நாள் ஆகையால் ரதசப்தமி திருநாளை சின்ன பிரமோற்சவம் என்றும் கூறுவது வழக்கம்.
ஒரே நாளில் ஏழுமலையானின் ஏழு வாகன புறப்பாடுகளை கண்டு தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் ஆகையால் அன்றைய தினம் ஏழுமலையானை வழிபட லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள். எனவே அதற்கு தேவையான வகையில் அனைத்து அடிப்படை ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து முடித்துள்ளது. திருப்பதி மலையில் உள்ள மாட வீதிகளில் சாமி தரிசனத்திற்காக முதல் நாள் இரவு முதல் பக்தர்கள் காத்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
எனவே சாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு பனி, வெயில் ஆகியவற்றின் காரணமாக பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க மாட வீதிகள் முழுவதும் தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர அன்றைய தினம் காலை முதல் இரவு வரை சாமி கும்பிடுவதற்காக மாட வீதிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, டீ, காபி, பால் ஆகியவற்றை வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருப்பதி மாவட்ட எஸ் பி ஆக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் மல்லிகா கார்ஹ், தேவஸ்தான தலைமை கண்காணிப்பு அதிகாரி நந்தகிஷோருடன் இணைந்து ரதசப்தமியை முன்னிட்டு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை திருப்பதி மலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,”கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு தேவையான எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். திருப்பதி மலை முழுவதையும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. எனவே கட்டுப்பாட்டு அறையில் இருந்து பக்தர்களின் நடமாட்டம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும்” என்று அப்போது தெரிவித்தார்.