அசாம் கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு; வாகனம் மீது தாக்குதல் – உச்சக்கட்ட பரபரப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது.
ராகுல் காந்தியின் யாத்திரையானது நாகாலாந்தை கடந்து தற்போது பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் உள்ள நிலையில், அவரது யாத்திரைக்கு ஆளும் பாஜக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி சென்ற பேருந்து பாஜக தொண்டர்களால் வழிமறித்து தாக்கப்பட்டதாகவும், அப்போது ஜெய் ஸ்ரீராம், மோடி… மோடி… முழக்கங்களை அவர்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிரதமர் மோடியை பார்த்தோ, அசாம் முதல்வரை பார்த்தோ பாஜகவை பார்த்தோ தாங்கள் பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் சமூக சீர்திருத்தவாதியான புனித ஸ்ரீமந்த சங்கர்தேவாவின் பிறந்த இடமான படத்ரவா தானுக்குச் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் தான் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை ராகுல் காந்தி கேட்பது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
இதனிடையே, உள்ளூர் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., ஒருவரை கோவிலுக்கு செல்ல அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று கூறுகையில், “ராகுல் காந்தி அங்கு செல்ல விரும்பினார். இதற்காக ஜனவரி 11ஆம் தேதி முதல் நாங்கள் முயற்சித்து வருகிறோம், எங்கள் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் இதற்காக கோயில் நிர்வாகத்தை சந்தித்துள்ளார்கள்.” என்றார்.
“ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு இங்கு வருவோம் என்று சொன்னோம். அதற்கு சரி என்றார்கள். ஆனால், நேற்று திடீரென மாலை 3 மணி வரை அனுமதி இல்லை என்கிறார்கள். மாநில அரசின் அழுத்தம் காரணமாக அவர்கள் இதுபோன்று சொல்கிறார்கள்.” என ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார். நாங்கள் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது. எனவே, மாலை 3 மணிக்குப் பிறகு அங்கு செல்வது மிகவும் கடினம். அதற்கு முன்பு அங்கு செல்வதற்கு முயற்சிப்போம்.” என்றார்.
அதேசமயம், படத்ரவாதான் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தி மாலை 3 மணிக்குப் பிறகு வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “ராமர் கோவிலின் பிரான்பிரதிஷ்டை என்பதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதுதவிர ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் வளாகத்திற்கு வெளியே பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், ராகுல் காந்திக்கு மாலை 3 மணிக்கு மேல் அனுமதி அளிக்கப்படும். இதுகுறித்த முடிவு கமிட்டியின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.” என படத்ரவாதான் நிர்வாகக் கமிட்டி தெரிவித்துள்ளது.