மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா? மத்திய ரயில்வே அமைச்சர் பதில்
அஹமதாபாத்: ரயில் கட்டண சலுகை மூத்த குடிமக்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது பார்ப்போம்.
இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான ரயில்வே ஒரு நாளைக்கு ஏராளமான ரயில்களை பல்வேறு பகுதிகளுக்கு இயக்கி வருகிறது. இந்திய மக்களின் முக்கியமான போக்குவரத்தாக ரயில்கள் உள்ளது. சாமானிய மக்கள் அதிகம் பயணிப்பது ரயில்களில் தான். தொலைதூர பயணம் மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களுக்கும், பிழைப்பு தேடி வெளியூர் அல்லது வெளிமாநிலம் வரும் மக்களுக்கும் வரப்பிரசாதமாக ரயில்கள் உள்ளன.’
இந்த ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை பல ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வந்தது. பெண்கள் மூத்த குடிமக்கள் பயணிகளுக்கு 50 சதவீத சலுகையும், வயதான ஆண் மற்றும் திருநங்கைகள் அனைத்து வகுப்புகளிலும் 40 சதவிகிதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது. சலுகையைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு ஒரு பெண்ணுக்கு 58 வயதாகவும், ஆணுக்கு 60 வயதாகவும் இருந்து வந்தது.
இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் நாடு முழுவதும் 3 மாதங்கள் முற்றிலும் முடங்கியது.இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரயில்வே அப்போது ரத்து செய்தது.
ஆனால் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ரயில் சேவை முழுவதுமாக பழையபடி தொடங்கப்பட்ட நிலையில் இப்போது வரை மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படவில்லை. அதேநேரம் 2022-23 ஆம் ஆண்டில் மூத்த குடிமக்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சலுகையை ரத்து செய்ததன் மூலம் சுமார் 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ரயில்வே ஈட்டியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஒரு கேள்விக்கு பதில் அளித்த ரயில்வே, 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையான காலகட்டத்தில், கிட்டத்தட்ட எட்டு கோடி மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்கவில்லை. சுமார் 4.6 கோடி ஆண்கள், 3.3 கோடி பெண்கள் மற்றும் 18,000 திருநங்கைகள் ஆகியோர் பயணம் செய்தனர். இந்த காலகட்டத்தில் மூத்த குடிமக்கள் பயணிகளின் மொத்த வருவாய் ரூ. 5,062 கோடியாகும். இதில் சலுகை நிறுத்தப்பட்டதன் மூலமாக ரயில்வே துறை ரூ.2,242 கோடி ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில்வே வெளியிட்ட தகவலின் படி, 2020ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையான காலக்கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 4.46 கோடி ஆண் பயணிகளும், 58 வயதுக்கு மேற்பட்ட 2.84 கோடி பெண் பயணிகளும், 8,310 திருநங்கைகள் என மொத்தம் 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை.
இந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?” என செய்திகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. அதேநேரம் வேறு கருத்தை அவர் கூறினார்.