தமிழகத்தில் 10-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் : பி.ஆர்.பாண்டியன்..!
தஞ்சாவூர் அருகே திருவோணத்தில், காவிரி விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 10-ம் தேதி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து அமைதியான முறையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மத்திய அரசு துணை ராணுவத்தை கொண்டு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து சுமூகமாக பேசி தீர்ப்போம் என்று கூறி விட்டு இதுவரை முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்து விட்டனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மீண்டும் டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.