ரகசியம் காத்த பிசிசிஐ.. போட்டு உடைத்த ராஜீவ் சுக்லா.. அஸ்வின் குடும்பத்தில் நடந்தது என்ன?
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் தாயார் உடல்நிலை மோசமாகியுள்ளதால், அவரை பார்க்க அவசர அவசரமாக சென்னை திரும்புவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது.
இதில் இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலி 15 ரன்கள் எடுத்திருந்த போது, அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். அனில் கும்ப்ளேவுக்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான். இதனால் கிரிக்கெட் உலகமே அவருக்கு வாழ்த்து கூறி வந்தது.
இந்த நிலையில் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ எமர்ஜென்சி காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாகவும், அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவையும் அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் அனைவரும் ரவிச்சந்திரன் அஸ்வினின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் அவசர அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அஸ்வினின் குடும்பத்தினருக்கு என்ன ஆனது என்ற குழப்பம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ நிர்வாகிகளில் ஒருவரான ராஜிவ் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில், அஸ்வினின் தாயார் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். அஸ்வின் தனது தாயாருடன் இருக்க ராஜ்கோட் டெஸ்டில் இருந்து விலகி சென்னைக்கு புறப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக அஸ்வினின் தாயார் உடல்நிலை மோசமாக இருப்பது தெரிய வந்துள்ளது.