மகேந்திரன் படத்தின் கதைப்பிடிக்காமல் விலகிய ரஜினி

1978 ல் பைரவி படத்தில் தனி ஹீரோவான ரஜினிக்கு, ஹீரோவாக திருப்புமுனை தந்த படம் அதேவருடம் வெளியான மகேந்திரனின் முள்ளும் மலரும். வருட இறுதியில் வெளியான ப்ரியா வெள்ளிவிழா ஓடி ரஜினியை ஹீரோவாக நிலைநிறுத்தியது.
மகேந்திரன் முள்ளும் மலரும் படத்துக்குப் பிறகு தனது கிளாஸிக் திரைப்படமான உதிரிப்பூக்களை இயக்கினார். படம் ஹிட். அதையடுத்து எழுத்தாளர் பொன்னீலனின் உறவுகள் கதையை படமாக்குவது என்று தீர்மானித்தார். மகேந்திரனின் முதலிரு படங்கள் – முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் – இரண்டும் முறையே உமா சந்திரனின் முள்ளும் மலரும், புதுமைப்பித்தனின் சிற்றன்னை ஆகிய கதைகளைத் தழுவி எடுக்கப்பட்டவை.
பொன்னீலனின் உறவுகள் கதையில் ரஜினியை நடிக்க வைப்பது என்று தீர்மானித்து, விளம்பரமும் செய்யப்பட்டது. பிறகு அந்தக் கதை தனக்கு ஒத்து வருமா என்ற சந்தேகத்தில் படத்திலிருந்து ரஜினி விலகினார். கால்ஷீட் பிரச்சனையும் ஒரு காரணம். பிறகு நஸ்ருதீன் ஷா, ஸ்மிதா பட்டீலை நடிக்க வைக்க மகேந்திரன் விரும்பினார். ஸ்மிதா இந்தியில் பிஸியான நேரம். மறுபடியும் கால்ஷீட் பிரச்சனையில் சிக்கிக் கொள்வோம் என உதிரிப்பூக்களில் நடித்த சாருலதாவை நாயகியாக்கினர். மலையாள நடிகர் ஜெயனை நாயகன். அது பஞ்சு அருணாசலத்தின் தேர்வு. படத்துக்கு பூட்டாத பூட்டுக்கள் என்று பெயர் வைக்கப்பட்டது.
குழந்தையில்லாத தம்பதியின் வாழ்வில் ஏற்படும் உறவுச்சிக்கல்தான் கதை. மனைவி கணவனைவிட்டு வேறொருவனுடன் போய், மீண்டும் கணவனிடமே திரும்பி வரும் கதை. குப்பத்து ராஜா, அன்னை ஒரு ஆலயம், பில்லா என்று ஆக்ஷன் ஏரியாவில் அடித்துக் கிளப்பிக் கொண்டிருந்த ரஜினிக்கு பூட்டாத பூட்டுக்கள் எந்தவகையில் ஒத்துவராத கதை. அவர் அதனை நிராகரித்தது சரியானது. படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி கண்டது.
இதையடுத்து மகேந்திரன் ரஜினியையும், ரசிகர்களையும் கருத்தில் வைத்து எழுதிய கதைதான் ஜானி. படம் பம்பர்ஹிட்டாகி இன்றுவரை கிளாஸிக்காக நிலைத்திருக்கிறது. நடிகர்களுக்கு நடிப்பில் மட்டுமில்லை, கதைத்தேர்விலும் கவனம் வேண்டம் என்பதற்கு பூட்டாத பூட்டுக்கள் ஒரு உதாரணம்.