இலவச மருத்துவமனை கட்டப்போகும் ரஜினி..!
சென்னையின் புறநகர்ப் பகுதியான திருப்போரூரில் நடிகர் ரஜினிகாந்த் இலவச மருத்துவமனை கட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக அப்பகுதியில் அவர் 12 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதற்கான பத்திரப்பதிவு அண்மையில் நடைபெற்றது.
ரஜினிகாந்த் கட்டப்போகும் மருத்துவமனையில் ஏழை களுக்கு இலவசமாகவும் வசதி உள்ளவர்களுக்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள தனக்கு மிக நெருக்கமான நண்பர் ஒருவரை ரஜினி நியமிக்க உள்ளதாகத் தகவல்.
மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரஜினிகாந்த் வருவதை அறிந்த ரசிகர்கள், பதிவாளர் அலுவலகம் முன்பு திரளாகக் கூடினர்.
திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தான் நேற்று முன்தினம் பத்திரப்பதிவு நடந்தது. நிலத்தை பதிவு செய்ய ரஜினிகாந்த் வந்ததால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 9.45 மணிக்கு வந்த ரஜினிகாந்த் பத்திரப்பதிவு வேலையை முடித்துக் கொண்டு 10.30 மணிக்கு கிளம்பிச் சென்றார்.
இந்நிலையில் 12 ஏக்கர் நிலத்தில் ரஜினி கட்டவிருக்கும் மருத்துவமனை குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏழைகளிடம் பணம் வாங்க மாட்டார்களாம். ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்படுமாம். அதே சமயம் வசதி படைத்தவர்களிடம் கட்டணம் வாங்கிக் கொண்டே சிகிச்சை அளிக்கப்படுமாம். ரஜினியின் இந்த இலவச மருத்துவ விஷயம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.