Rajinikanth – Vijay: “காக்கா – கழுகு கதை” அன்பை பரப்பச்சொன்ன ரஜினி – மீண்டும் விஜய் மீது வெறுப்பை உமிழும் ரசிகர்கள்..!
Rajinikanth – Vijay: ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களின் மோதலால், சமூக வலைதளங்கள் மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளன.
ரஜினியின் காக்கா – கழுகு கதை பிரச்னை:
கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அதன் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, உயர உயர பறந்தாலும் காகா, கழுகு ஆகாது என்ற வகையிலான கதையை கூறினார். அப்படி அவர் காகா என குறிப்பிட்டது, நடிகர் விஜயை தான் என ரஜினியின் ரசிகர்கள் தாமாகவே முடிவு செய்து கொண்டு சமூக வலைதளங்களில் ஏராளமான விமர்சனங்களை குவித்தனர். விஜயால் என்றும் ரஜினியின் இடத்தை பிடிக்க முடியாது எனவும், ஒரே சூப்பர் ஸ்டார் அவர் தான் என்றும் சமூக வலைதங்களில் டிரெண்ட் செய்தனர். மேலும், காகா – கழுகு என்பது பிரபலமான மீம் டெம்பிளேட்டாகவும் மாறியது.
விஜய் தந்த பதிலடி:
இத்தகைய சூழலில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் பேசிய விஜய், ‘ஒரு காட்டுக்கு 2 பேர் வேட்டைக்கு போனாங்க. அந்த காட்டுல மான்,மயில், முயல், காகம், கழுகு என எல்லாம் இருக்கும். (கழுகு என சொன்னதும் மொத்தம் அரங்கமும் அதிர்ந்தது). காடுன்னு இருந்தால் இதெல்லாம் இருக்கும் தானே அதுக்காக சொன்னேன்’ என குட்டி கதையை சொன்னார். இந்த கதையில் காகா, கழுகு என விஜய் சொன்னது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன, கதைக்கான பதிலடி தான் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
ரஜினி தந்த விளக்கம்:
இந்நிலையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, ‘ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழால் நான் காக்கா – கழுகு கதை சொன்னது வேற மாதிரி சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. நான் விஜய்யை சொன்ன மாதிரி போய்டுச்சு. அது எனக்கு நிஜமாகவே வருத்தமா இருந்துச்சு. விஜய் என் கண் முன்னாடி வளர்ந்த பையன். நான் எப்போதும் அவரது நலம் விரும்பி தான். தயவுசெய்து இரண்டு பேரோட ரசிகர்களும் எங்கள் இருவரையும் ஒப்பிடாதீர்கள். இது என்னோட அன்பான வேண்டுகோள்’ என குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் இந்த பேச்சை திரைத்துறையினர் பலரும் வரவேற்று, பாராட்டி வருகின்றனர்.
வெறுப்பை உமிழும் ரசிகர்கள்:
அதேநேரம், ரஜினியின் பேச்சு சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு பெரும் பிரச்னையின் துவக்க புள்ளியாக மாறியுள்ளது. அதாவது அன்பை பகிருங்கள் என ரஜினி கூறிய வார்த்தையை சற்றும் கருத்தில் கொள்ளாமல், அவரது ரசிகர்கள் மீண்டும் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன்பட், ‘ரஜினி எவ்வளவு பெருந்தன்மையாக இருக்கிறார், ஆனால் இதை சற்றும் உணராத விஜய் லியோ வெற்றி விழாவில் அநாவசியமான வார்த்தைகளை பேசிவிட்டார். ரஜினி தனது முன்மாதிரி என பேசினால் மட்டும் போதாது, அவரை போல வாழவும் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும்’ என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.