ராஜ்கோட் டெஸ்ட் | அக்சர் படேல் vs குல்தீப் யாதவ் – செலக்ஷனில் யாருக்கு அதிக வாய்ப்பு?
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தியதற்கு பிரதான காரணம் பும்ரா எனில் மற்றொரு காரணம் குல்தீப் யாதவ் என்றால் மிகையாகாது.
எனவே, ராஜ்கோட்டில் நாளை மறுநாள் (பிப்.15) தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு ஜடேஜா உடல் தகுதிப் பெற்று விட்டால் குல்தீப் யாதவை தக்க வைத்து அக்சர் படேலை நீக்குவதா அல்லது குல்தீப்பை நீக்குவதா என்ற செலக்ஷன் தர்ம சங்கடம் இந்திய அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
குல்தீப் யாதவ் அணிக்கு முக்கியமாக தேவை. ஏனென்றால் அவர் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் அச்சுறுத்தல் வகை பவுலர் ஆவார். விசாகப்பட்டினம் பிட்ச் பேட்டருக்குச் சாதகமான ஆடுகளம். அதில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் குல்தீப். மேலும் அந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரை விட சிக்கனமாகவும் வீசினார்.
குல்தீப் இடது கை லெக் ஸ்பின்னர் அதுவும் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் எந்தப் பிட்சிலும் இவர் பந்துகளில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருப்பது இயல்பே. இதனால் இங்கிலாந்தின் ஸ்பின்னுக்கு எதிரான உத்தியான ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் போன்ற ஷாட்களை ஆடுவது கடினம். மேலும் குல்தீப் யாதவ் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசி இங்கிலாந்து பேட்டர்களின் அதிரடி ஸ்வீப்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். இவரை ஸ்வீப் ஆடப்போய் பந்து மட்டையில் சிக்கவில்லை எனில் பவுல்டு எல்.பி. ஆக வாய்ப்புகள் அதிகம். அதனால் இங்கிலாந்து பேட்டர்கள் இவரிடம் ரிஸ்க் எடுக்க பயப்படுகின்றனர்.