“ராமர் கடவுள் இல்லை”.. போஸ்ட் போட்ட தலித் சிறுவனை அடித்து இழுத்து சென்ற காவி கும்பல்..!
கர்நாடகாவின் பிதாரில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி செல்லும் மாணவன், “கடவுள் இல்லை” என்ற தலைப்பில் ராமர் மற்றும் அனுமன் படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வலதுசாரி கும்பல் அச்சிறுவனை சரமாரியாக தாக்கியது.
இது தொடர்பான வீடியோ வைரலானதால், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, கர்நாடக மாநிலம் பிதார் ஹம்னாபாத் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
காணொளியில், பள்ளி மாணவன் காவி நிற தலைப்பாகை அணிந்தபடி ஒரு குழுவினரால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம். ஆட்டோவில் இருந்து மாணவன் இறங்கியபோது, அவரை சுற்றி வளைத்த ஒருவர், மாணவனை சரமாரியாக அறைந்தார். பின்னர், மாணவனை தரதரவென கோயிலுக்குள் அழைத்துச் சென்று, தெய்வத்தின் முன் சாஷ்டாங்கமாக வணங்க வைத்தனர். மேலும் அந்த கும்பல் மாணவனின் செல்போனை சோதனை செய்யும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.