Ram Mandir: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா – ரஜினிக்கு ஸ்பெஷலாக ரியாக்ஷன் கொடுத்த மோடி – வீடியோ வைரல்!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவானது சீரும் சிறப்புமாக நாடே மெச்சிக் கொள்ளும் அளவில் நடந்து முடிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த கும்பாபிஷேக விழாவில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் திரையுலகிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பின்னணி பாடகரான சங்கர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா, அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், மிதாலி ராஜ் ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சினிமா, தொழிலதிபர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபங்களுக்கு முன் வரிசையில் இருக்கைகள் கொடுக்கப்பட்டது. ரஜினிகாந்த் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் சச்சின் டெண்டுல்கர் அமர்ந்திருந்தார். இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இது ஒரு புறம் இருந்தாலும் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மூத்த சகோதரர் சத்யநாராயணா ஆகியோரையும் அயோத்தி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு தன்னுடன் அழைத்து சென்றிருந்தார். ஆனால், ரஜினிக்கு மட்டும் முன்வரிசையில் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தினருக்கு இடம் ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து பேசி அவர்களுக்கு விஐபிக்கள் அமரும் இருக்கையில் அமர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது அனைவரையும் வரவேற்கும் நிகழ்வாக கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே சென்றார். அப்போது ரஜினிகாந்தை பார்த்த மோடி, அவரிடம் நலம் விசாரித்து அவருக்கு சிறப்பு மரியாதை கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று அமிதாப் பச்சனிடமும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.