Ram Temple: “ரொம்ப தீவிரமான காலத்தை நோக்கி இந்தியா… கலை தான் ஆயுதம்..” ரஜினி பட இயக்குநர் கருத்து
சென்னை: அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
அதில் பேசிய படத்தின் தயாரிப்பாளரும், கபாலி, காலா படங்களின் இயக்குநருமான பா ரஞ்சித், ராமர் கோயில் திறப்பு குறித்து மறைமுகமாக கருத்துக் கூறியுள்ளார். கலை தான் மக்களின் மனங்களை சரி செய்யும் ஆயுதம் என கருத்து தெரிவித்துள்ளார்.
கலை தான் ஆயுதம்
அட்ட கத்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பா ரஞ்சித், மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரங்கள் நகர்கிறது போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தையும் பா ரஞ்சித் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், படங்கள் தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தயாரித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது.
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இந்நிலையில், ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பா ரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் பா ரஞ்சித், இன்றைய ராமர் கோயில் திறப்பு குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள், திரையுலகினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, அவரது குடும்பத்தினர், நடிகர்கள் தனுஷ், அர்ஜுன், டோலிவுட்டில் இருந்து சிரஞ்சீவி, ராம் சரண், பவன் கல்யாண், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் நிலையில், இயக்குநர் பா ரஞ்சித்தின் கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. “ரொம்ப தீவிரமான காலத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் நாம் இருக்கப் போகிறோம் என்ற பயம் நமக்கு வருகிறது.”