ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு தூதர்கள் உட்பட 55 நாடுகளில் இருந்து 100 தலைவர்களுக்கு அழைப்பு
புதுடெல்லி:அயோத்தி ராமர் கோவில் சிலை கும்பாபிஷேக விழா பிரதமர் மோடி தலைமையில் வரும் 22-ம் தேதி நடக்கிறது.
இதில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து, உலக இந்து அறக்கட்டளையின் தலைவர் சுவாமி விக்யானந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு தூதர்கள் உட்பட 55 நாடுகளில் இருந்து 100 தலைவர்களை அழைத்துள்ளோம்.
இறைவன் ராமர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்று கூறும் கொரிய ராணியையும் நாங்கள் அழைத்துள்ளோம்.அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, டொமினிகா, எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து விவிஐபிக்கள் 20-ம் தேதி லக்னோவுக்கு வருவார்கள்.21-ம் தேதி மாலை அயோத்தி சென்றடைவார்கள்.பனிப்பொழிவு காரணமாக, இந்தியாவுக்கு முன்கூட்டியே வருமாறு கோரப்பட்டுள்ளது.
பல உலக தலைவர்களை அழைக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனால் இடம் குறைவாக இருப்பதால், விருந்தினர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.