ராமர் கோயில் திறப்பு விழா | அயோத்தி சிறப்பு யாகத்தில் கங்கனா ரனாவத் பங்கேற்பு
அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழா நாளை (ஜன.22) நடைபெறுவதையொட்டி அயோத்தி நகர் சென்றடைந்த நடிகை கங்கனா ரனாவத், அங்கு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் நாளை (ஜன 22) கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. நண்பகல் 12.20 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து இன்று (ஜன.21) காலை நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டுச் சென்றார். நடிகர் தனுஷ் லக்னோவிலிருந்து அயோத்தி சென்றுள்ளார். அந்த வகையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்று காலை அயோத்தி சென்றடைந்தார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு யாகம் ஒன்றில் அவர் பங்கேற்றார். மேலும் சுவாமி ராமபத்ராச்சாரியாரை சந்தித்தது குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் கங்கனா பதிவிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் கங்கனா கூறியிருப்பதாவது: இன்று மதிப்புக்குரிய ஸ்ரீ ராமபத்ராச்சார்யா ஜி அவர்களைச் சந்தித்து அவரது ஆசிகளைப் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவர் நடத்திய அனுமான் சிறப்பு யாகத்தில் நான் பங்கேற்றேன். புனித நகரமான அயோத்தியில், ஸ்ரீராமரின் வரவேற்பு எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. நாளை, அயோத்தி மன்னர்கள் நீண்ட வனவாசம் முடிந்து வீடு திரும்புகிறார்கள்’ இவ்வாறு கங்கனா அப்பதிவில் கூறியுள்ளார்.