ராமர் கோவில் கும்பாபிஷேகம் – விராட் கோலி, அனுஷ்கா சர்மாவிற்கு அழைப்பு!
உத்திர பிரதேசத்தில், கட்டப்பட்டுள்ள அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர். மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியோர், மற்றும் சினிமா, கிரிக்கெட் பிரபலங்களுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், ரத்தன் டாடா, ரஜினிகாந்த் என்று பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இந்த கோவிலை திறந்து வைக்கும் நிகழ்வில் நாடு முழுவதும் 7,000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அன்றைய தினம் கோயில் கருவறையில் ராம் லல்லா (ராமரின் குழந்தை வடிவம்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, இந்த வரலாற்று தருணத்தை குறிக்கும் வகையில் தீபங்களை ஏற்றி வைக்குமாறு பிரதமர் மக்களை ஏற்கனவே வலியுறுத்தி உள்ளார். மேலும் நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளை பாஜக ஏற்பாடு செய்து வருகிறது.
மேலும், இன்னும் கும்பாபிஷேகத்திற்கு 6 நாட்கள் உள்ள நிலையில், 11 நாட்கள் விரதம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இன்று ஆந்திரா சென்றுள்ள பிரதமர் மோடி லேபாக்ஷியில் உள்ள வீரபத்ரா சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.