ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடவுளின் விழா: சொல்கிறார் அகிலேஷ்
வரும் 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், இது கடவுளின் விழா என உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.உ.பி., மாநிலம் அயோத்தியில், வரும் 22ம் தேதி, ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தவிர, மிக மிக முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இந்நிலையில், ‘ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை’ என, இண்டியா கூட்டணியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ், மஹாராஷ்டிராவை சேர்ந்த உத்தவ் தாக்கரேயின், உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி, தேசியவாத காங்., உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துவிட்டன.காங்கிரசை பொருத்தவரையில், தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் சோனியா, லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகிய மூன்று பேர் அழைப்பிதழை பெற்றுள்ளனர். ஆனாலும், மூவரும் பங்கேற்பது குறித்து தற்போது வரை முடிவாகவில்லை.
இதுபற்றி பலமுறை கேட்டுப்பார்த்தும், காங்., முக்கிய தலைவர்கள் பலரும், ‘இன்னும் பல நாட்கள் உள்ளன; அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்ற, மழுப்பலான பதில்களையே தருகின்றனர்.உ.பி.,யின் மிக முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியோ, மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும், எம்.பி.,யுமான டிம்பிள் யாதவ், ‘அழைப்பு வந்தால் நிச்சயம் கலந்து கொள்வேன்’ என்று கூறிவிட்டார். இது பற்றி அகிலேஷ் யாதவ் கூறுகையில், ”இது கடவுளின் விழா. முதல்வர் ஒன்றும் கடவுளை விட பெரியவர் இல்லை. கடவுள் ராமரால் அழைக்கப்பட்டவர்கள் நிச்சயம் விழாவிற்கு செல்வார்கள்” என பதிலளித்தார்.