மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க ராமர் கோவில் பிரச்சாரம் செய்ய திட்டம்: 303 இடங்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயம்
பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம் பிரதமர் மோடியை மையமாகக் கொண்டது. மோடி இந்துத்துவா, வளர்ச்சி மற்றும் இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தின் குறியீடாக முன்வைத்து அக்கட்சி பிரச்சாரம் செய்ய உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி, ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் ராமர் கோயில் தொடர்பான பிரச்சாரத்திற்கான மைக்ரோ-லெவல் திட்டத்தைத் தயாரிப்பது மட்டுமல்லாமல், தேர்தலுக்கான உத்திகள் குறித்து ஆலோசிக்க பா.ஜ.க தலைமை செவ்வாய்க்கிழமை தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியது.
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தேர்தலுக்கு, உத்திகள், பிரச்சாரம், கையில் எடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பா.ஜ.க மூத்த தலைவர்களின் உயர்மட்டக் குழு, அக்கட்சி தலைமையகத்தில் அன்று காலை கூட்டம் நடத்தியது.
இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைன்ஷ்னாவ் மற்றும் மன்சுக் மாண்டவியா, கட்சியின் பொதுச் செயலாளர்கள் சுனில் பன்சால், வினோத் தாவ்டே மற்றும் தருண் சுக் மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் இடம்பெற்றனர்.
தற்போதுள்ள திட்டங்களை செயல்படுத்துவதை மேற்பார்வையிட கட்சி துணைக் குழுக்களை அமைக்கவும், இதற்கான அழைப்பு மையங்களை அமைக்கவும் குழு முடிவு செய்தது.
இந்த கூட்டத்தில், பா.ஜ.க-வின் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கான உத்திகள் மற்றும் வழிகளை வகுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் கட்சி தற்போதுள்ள எண்ணிக்கையையும், வரவிருக்கும் தேர்தலில் வாக்குப் சதவிகிதத்தையும் மேம்படுத்த முடியும்.
2019 தேர்தலில் பெற்ற 303 இடங்களையும் 37.36% வாக்கு சதவிகிதத்தையும் தாண்ட பா.ஜ.க தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் வியூகம், பிரதமர் நரேந்திர மோடியை மையமாகக் கொண்டுள்ளது. அக்கட்சி பிரச்சாரத்தின் உந்துதலாக மோடியை “இந்துத்துவா, வளர்ச்சி மற்றும் இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தின் குறியீடாக இருப்பார்” என்று தெரிகிறது.
பிற்பகலில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவர்களிடம் உரையாற்றினார் – பெரிய மாநிலங்களில் இருந்து நான்கு-ஐந்து தலைவர்கள் மற்றும் சிறிய மாநிலங்களில் இருந்து இரண்டு தலைவர்களிடம் – கும்பாபிஷேகத்துக்குப் பிறகு ராமர் கோயில் திறப்பு தொடர்பான கட்சியின் திட்டங்களைப் பற்றி அவர்களுக்கு விளக்கினார்.