ராமர் நம்முடையவர் அல்ல; ராமர் எல்லோருக்குமானவர்…கண்ணீருடன் பேசிய மோடி..!

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்ட நிலையில், அதன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், பிரபலங்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். அப்போது கூடியிருந்த அனைவரும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி பேசியதாவது:

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கோயிலுக்கு ராமர் வந்ததை பார்த்ததும் எனது உடல் எல்லாம் நடுங்கிவிட்டன. எனது குரல் கூட வெளியே வரவில்லை. இந்த உணர்ச்சியை என்னால் விவரிக்க முடியவில்லை. நீண்ட பொறுமை, எண்ணற்றோரின் உயிர்த் தியாகம் ஆகியவற்றை கடந்து ராமப்பிரான் கோயிலுக்கு வந்திருக்கிறார். இனி அவர் குடிசையில் இருக்க வேண்டியதில்லை. அவருக்கான மாளிகைக்குள் அவர் வந்துவிட்டார்.

இந்த நாள் இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம். இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். சரியான தீர்ப்பை வழங்கி சட்டத்தை நிலைநாட்டியது உச்ச நீதிமன்றம் தான். இல்லையென்றால், இந்த இனிய நாள் வந்திருக்காது. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டினால், பெரும் தீ பரவும் என சிலர் கூறினார். அவர்கள் இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை பற்றி புரிந்து கொள்ளாதவர்கள். ராமர் நெருப்பு அல்ல.. ஆற்றல். ராமர் சச்சரவு அல்ல; அவர் தீர்வு. ராமர் நம்முடையவர் அல்ல; ராமர் எல்லோருக்குமானவர்.

இன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது இந்துக்களுக்காக அல்ல. இந்தியாவுக்காக. இந்தியர்களின் ஒற்றுமையை இந்த உலகுக்கு தெரிவிப்பதற்காக. அப்படி பார்த்தால், இந்தியாவின் ஒற்றுமைச் சின்னம் என்று கூட நாம் அயோத்தி ராமர் கோயிலை அழைக்கலாம். இந்த நேரத்தில் ராமப்பிரானிடம் நான் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். ராமரை இங்கு அழைத்து வர இத்தனை வருடங்கள் தாமதமானதற்காக ஒட்டுமொத்த இந்தியர்கள் சார்பில் ராமப்பிரானிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *