இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?
ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். சவூதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை ரமலான் பிறை தென்பட்டது. இதனால் நேற்று (திங்கட்கிழமை) முதல் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு தொடங்கியது.
இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாகவும் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால், நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவர்களை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டியவைகள்..
1. புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் அனைத்து வகையான அசுத்தங்கள் மற்றும் இன்பங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். மாறாக, அவர்கள் பிரார்த்தனைகள், ஆன்மாவின் தூய்மை, ஆன்மீகம் மற்றும் தொண்டு ஆகியவற்றில் தங்கள் மனதை செலுத்த வேண்டும். இதை காலம் காலமாக இஸ்லாமிய மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
2. புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பது இந்த மாதத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே, விரத விதிப்படி சூரியன் உதிக்கும் முன்பும், சூரியன் மறைந்த பின்பும் மட்டுமே உணவு உண்ணலாம்.
3. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்பட்டவர்கள் இந்த நேரத்தில் நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். பருவமடையும் குழந்தைகள் நோன்பு வைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதே போன்று, மிகவும் வயதான பெரியோர்களும் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.
4. பாரம்பரியமாக, மக்கள் பேரீச்சம்பழத்துடன் நோன்பை முடித்து கொள்வார்கள்.
5. ஒரு மாத நோன்பை முடிக்கும் வகையில் மிகப்பெரிய இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தின் பண்டிகை நாளில், சந்திரனைப் பார்த்த பிறகு நோம்பு முடிவடைகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ரம்ஜான் கொண்டாட்டத்தில் உணவு தானம் செய்ய வேண்டும். அதாவது சமைத்த உணவை சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண வேண்டும்.