காகங்கள் நுழையாத ராமதேவர மலை
பிரசித்தி பெற்ற ராமதேவர மலையில், காகங்களை பார்க்க முடியாது. இதற்கு கடவுளின் சாபமே காரணம் என, கூறப்படுகிறது.ராம்நகர் மாவட்டத்துக்கு, ராமதேவர மலை பெருமை சேர்த்துள்ளது என்பது, பலருக்கும் தெரியும்.
ஆனால் காகங்கள், ராமதேவர மலையில் நுழைய அனுமதியில்லை என்பது, பலருக்கும் தெரியாது. இதன் பின்னணியில், ஒரு புராண கதை கூறப்படுகிறது.ராமர் வன வாசத்தில் இருந்தபோது, காட்டில் (தற்போதுள்ள ராமதேவர மலை) தன் மனைவி சீதையின் மடியில் படுத்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது, காகாசுரன் என்ற ராட்சதன், காகத்தின் ரூபத்தில் அங்கு வந்து சீதையின் மார்பில், தன் அலகால் கொத்துகிறான். காகாசுரன் அதற்கு முன்பு கந்தர்வனாக இருந்தவன்.
பெண்ணை சீண்டிய குற்றத்தால், சாபத்தால் பூலோகத்தில் காகமாக பிறப்பெடுத்தான்.தன் கணவரின் உறக்கம் கலைய கூடாது என்பதால், காகாசுரன் தன்னை கொத்துவதால் ஏற்பட்ட வலியை பொறுத்துக்கொண்டு, சீதை மவுனமாக அமர்ந்திருந்தார். ஆனால் இதை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த ஸ்ரீராமன், காகம் வடிவில் இருந்த காகாசுரனை நோக்கி அம்பை எய்கிறார். அம்பில் இருந்து தப்பிக்க, மூன்று லோகங்களுக்கு பறந்து செல்கிறான். ஆனால், காகாசுரனால் தப்பிக்க முடியவில்லை.ராமரின் அம்பை தடுக்கும் சக்தி, எந்த கடவுளுக்கும் கிடையாது.
இதை புரிந்து கொண்ட காகாசுரன், ராமனிடம் சரணடைந்து மன்னிப்பு கேட்டு, உயிர் பிச்சை வேண்டி நின்றான். அப்போது ராமன், காகாசுரனின் ஒரு கண்ணை பறித்துக்கொள்கிறார். இதனால் காகங்களுக்கு இப்போதும், ஒரு கண் தெரிவதில்லை என, பக்தர்கள் நம்புகின்றனர்.ராமன் ஓய்வெடுத்த ராமதேவர மலைக்கு, இனி எப்போதும் வரக்கூடாது என கட்டளையிடுகிறார். இதன்படி, இன்றைக்கும் காகங்கள், ராமதேவர மலையில் நுழைவதில்லை என்பது ஐதீகம். சுற்றுப்பகுதிகளில் காகங்கள் பறக்கும். ஆனால், ராமதேவர மலையில் நுழைவதை பார்க்க முடியாது. இதற்கு சாட்சியாக ராமதேவர மலையில், காகத்துக்கு ராமர் ஆசி கூறும் விக்ரகம் உள்ளது.