“ராமரின் ஆட்சி அரசியலமைப்புச் சட்ட பிதாமகர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது” – மனதின் குரல் உரையில் பிரதமர் பெருமிதம்

புதுடெல்லி: ராமரின் ஆட்சி, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் உரையில் தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டின் (2024) முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: “எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இந்த ஆண்டின் முதலாவது மனதின் குரல் இது. அமுத காலத்திலே ஒரு புதிய உற்சாகம், புதிய உல்லாசம். இரண்டு நாட்கள் முன்பாகத் தான் நாட்டுமக்கள் அனைவரும் 75-வது குடியரசு நாளை கோலாகலத்தோடு கொண்டாடினோம். இந்த ஆண்டு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டும் கூட, உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. நமது ஜனநாயகத்தின் இந்தத் திருநாட்கள், ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலே, பாரதத்தை மேலும் சக்தி படைத்ததாக ஆக்குகின்றன.

பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் மிகுந்த ஆழமான கருத்தாய்வுக்குப் பிறகு தான் உருவாக்கப்பட்டது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதியின் 3-வது அத்தியாயத்தில், பாரதத்தின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. 3-வது அத்தியாயத்தின் தொடக்கத்திலே, ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரது சித்திரங்களுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்கள் இடமளித்துள்ளார்கள் என்பது மிகவும் சுவாரசியமான விஷயம். ராமனின் ஆட்சி, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்களுக்கும் கூட உத்வேகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது; ஆகையினால் தான் ஜனவரி 22-ம் தேதியன்று, அயோத்தியில் நான் ‘தெய்வம் முதல் தேசம் வரை’ என்று பேசியிருந்தேன், ‘ராமன் முதல் நாடு வரை’ என்றும் கூறியிருந்தேன்.

நண்பர்களே, அயோத்தியில் பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓர் இழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் ராமன், அனைவரின் இதயங்களிலும் ராமன். தேசத்தில் பலர் இந்த வேளையில் ராம பஜனைகளைப் பாடி, அவற்றை ராமனின் பாதார விந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி 22-ம் தேதியன்று மாலையில், நாடெங்கிலும் ராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *