ராமேஸ்வரம்: பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் 3 கி.மீ நடக்கும் பக்தர்கள்.. மோடி வருகை காரணமாக அவதி!
ராமநாதபுரம்: பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வரை செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.
பக்தர்கள் சுமார் 3 கி.மீ தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்து.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி.
பின்னர், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி. ராமேசுவரத்திற்குச் சென்றடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன் பின்னர் ராமநாதசுவாமி கோவிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார். இன்று இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார்.
ராமேஸ்வரம் வந்த மோடி: நாளை (ஜனவரி 21ஆம் தேதி) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். அதன் பிறகு கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார். அதன் பின்னர், 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி தமிழ்நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வருகை எதிரொலியாக ராமேஸ்வரத்தில் பக்தர்கள், போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.