இலங்கை தமிழர்களுக்கு 60,000 வீடுகள் கட்டி கொடுக்கும் இந்திய அரசு.., நன்றி தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க

இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி தர இந்திய அரசு சார்பில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 14 ஆண்டுகளை கடந்த பின்னரும் தமிழ் சமூகத்துக்கான பிரச்சனை இன்னும் ஓயவில்லை. அங்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. ஆனால், தமிழர்களுக்கு உரிய இன பிரச்சனை மட்டும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இலங்கை தமிழர்களின் சமூக, பொருளாதார உரிமைகள் நிலைநாட்டப்படும் என்றும், அதற்கான முயற்சியை எடுத்ததாகவும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாரதம் – இலங்கை திட்டம்
இந்திய அரசு சார்பில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி தர ‘பாரதம் – இலங்கை’ என்ற திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய அரசின் நிதியுதவியில் கீழ் 60,000 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், தோட்டத்துறையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு 10,000 வீடுகளை கட்டித்தரவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், நேற்று 45 தோட்ட எஸ்டேட்டில் 1,300 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர்.
நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்
இந்த விழாவில், இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பேசினார். அப்போது அவர், “இந்திய அரசு பெருந்தன்மையுடன் வீடு கட்டும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது. அதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பைச் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் சமூகம், பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. அவர்கள் நிலமும் வீடும் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களின் பொருளாதார உரிமைகளையும் சமூக உரிமைகளையும் நிலைநிறுத்துவது இன்றியமையாதது” என்றார்.