12 வயதில் ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகம்.. உண்மை என்ன? வயது மோசடியில் ஈடுபட்டாரா வைபவ் சூர்யவன்ஷி?

பாட்னா: மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பீகார் அணி சார்பாக 12 வயதே ஆகும் சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு எந்த வயது வரம்பும் கிடையாது. கடந்த காலங்களில் 14 வயதேயான ஸ்வப்னில் சிங் முதல் 41 வயதான பிரவீன் தாம்பே வரை அனைத்து வயதினரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர். ஆனால் தற்போது தொடங்கியுள்ள ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் 12 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் பீகார் அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள பீகார் கிரிக்கெட் சங்கம் பல்வேறு சர்ச்சைகளுடன் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது இரு தரப்பினர் தாங்கள் தான் பீகார் என்று மைதானத்தில் பயிற்சி போது மோதி கொண்ட சம்பவம் இந்திய கிரிக்கெட்டையே அசைத்து பார்த்தது.
இதுகுறித்து விசாரிக்கையில் பீகார் கிரிக்கெட் சங்கத்தின் புதிய செயலாளர் தரப்பில் ஒரு அணியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட செயலாளர் இருப்பவர் தரப்பில் ஒரு அணியும் தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, 12 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். 1986ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் 2010ஆம் ஆண்டுக்கு பின் பிறந்த ஒருவர் கூட அறிமுகமாகாத சூழலில், 2012ஆம் ஆண்டு பிறந்த வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் உண்மையான பிறந்தநாள் 2009, செப்டம்பர் 27 என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.