Ranji Trophy : விரட்டி விரட்டி விளாசும் ஜெகதீசன்.. மீண்டும் சதமடித்து சாதனை.. தமிழ்நாடு அணி மிரட்டல்
நடப்பாண்டுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரயில்வே அணியுடனான கடந்த போட்டியில் தமிழ்நாடு அணி அபார வெற்றியை பதிவு செய்தது. அதற்கு நட்சத்திர வீரர் ஜெகதீசனின் இரட்டை சதம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் கோவையில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் சண்டிகர் அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற சண்டிகர் அணி கேப்டன் மனன் வோரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய அர்ஸ்லான் சிங் – ஹர்நூர் சிங் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்தனர். அப்போது ஹர்நூர் சிங் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து கேப்டன் வோரா டக் அவுட்டாகினார். இதையடுத்து அர்ஸ்லான் சிங்கும் 18 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களில் குணால் மஹாஜன் மட்டும் 28 ரன்கள் சேர்த்தார்.
மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் சண்டிகர் அணி 47 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதில் கடைசி 5 விக்கெட்டுகள் வெறும் 8 ரன்களுக்குள் வீழ்த்தப்பட்டது. தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் மற்றும் சந்தீப் வாரியர் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 2 விக்கெட்டுகளையும், குல்தீப் சென் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சச்சின் – ஜெகதீசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சச்சின் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் ஜெகதீசன் – பிரதோஷ் பால் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஜெகதீசன் சதம் விளாச அசத்த, இன்னொரு பக்கம் பிரதோஷ் பால் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலமாக தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்துள்ளது.
ஜெகதீசன் 108 ரன்களும், பிரதோஷ் பால் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஏற்கனவே தமிழ்நாடு அணி 110 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால், 2வது நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முன்னிலையை அதிகப்படுத்தி இன்னிங்ஸ் வெற்றிக்கு முயற்சிக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சொந்த மண்ணில் அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடியாக சதம் விளாசிய ஜெகதீசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.