ரஞ்சி கோப்பை – மும்பை 42 முறை என்றால்? தமிழ்நாடு அணி எத்தனை முறை சாம்பியன் தெரியுமா?
இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு என்றால் அது ரஞ்சி கோப்பை தான். கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் எப்போதுமே மும்பை அணி தான் ஆதிக்கம் செலுத்தும். இதுவரை 42 முறை மும்பை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில் மற்ற அணிகள் ரஞ்சி கோப்பையை எத்தனை முறை வென்று இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். மும்பை அணி அதிகபட்சமாக 42 முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள்.
ஆறு முறை இறுதி போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். மும்பைக்கு அடுத்ததாக அதிக முறை ரஞ்சி கோப்பையை வென்ற அணி என்றால் அது கர்நாடகா தான். இதுவரை எட்டு முறை ரஞ்சி கோப்பையை வென்று இருக்கிறார்கள். ஆறு முறை இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.
இதற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் டெல்லி அணி இருக்கிறது. டெல்லி ஏழு முறை கோப்பையை கைப்பற்றி எட்டு முறை இறுதிப்போட்டி வரை வந்திருக்கிறார்கள். மத்திய பிரதேச அணி ஐந்து முறை ரஞ்சி கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள். ஏழு முறை ரன்னர் அப் ஆகி இருக்கிறார்கள்.
இதேபோன்று பரோடா அணி 5 முறை கோப்பையை கைப்பற்றி நான்கு முறை ரன்னர் அப் ஆகியிருக்கிறார்கள். சௌராஷ்ட்ரா அணி இரண்டு முறையும் விதர்பா அணி இரண்டு முறையும், பெங்கால் இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியும் 13 முறை ரன்னர் அப்பும் ஆகி இருக்கிறார்கள். இதற்கு அடுத்ததாக தமிழக அணி இதுவரை மொத்தமாகவே இரண்டு முறை தான் ரஞ்சி கோப்பையை வென்றிருக்கிறது.
ஆனால் 10 முறை தமிழக அணி இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியை தழுவி இருக்கிறார்கள். ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு அணி கடைசியாக 1988 ஆம் ஆண்டு தான் கோப்பையை கைப்பற்றியது. இதேபோன்று ராஜஸ்தான், ஹைதராபாத்,மகாராஷ்டிரா, ரயில்வே ஆகிய அணிகள் தலா இரண்டு முறை ரஞ்சி கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள். உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா, குஜராத் ஆகிய அணிகள் தலா ஒரு முறை ரஞ்சி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
முந்தைய காலத்தில் எல்லாம் மும்பை சுற்றியுள்ள வீரர்களே இந்திய அணியில் அதிகம் இடம் பிடிப்பார்கள். ஆனால் தற்போது கிரிக்கெட் பரவலாக இந்தியா முழுவதும் விளையாடப்படுவதால், இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் இருந்தெல்லாம் தற்போது கிரிக்கெட் வீரர்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் திறமையான வீரர்கள் அதிகம் இருந்தும் ரஞ்சி கோப்பையில் நம் அணியால் பெரும் அளவில் சாதிக்க முடியவில்லை.