13 வயதில் துணிக்கடையில் வேலை செய்த ரவி.. இப்போ ரூ.32,000 கோடிக்கு அதிபதி..!
இந்தியக் குடும்பங்களில் திருமணம் என்று வந்துவிட்டால் பெண் பிள்ளைகளுக்கு ஏகப்பட்ட குஷியாகிவிடும். காரணம் வகைவகையான புத்தாடைகளை வாங்கித் தருவார்களே!
புடவை முதல் இப்போது லேட்டஸ்ட் வரவான லெஹங்கா, கிராண்ட் கவுன் வரை கண்ணைப் பறிக்கும் டிசைன்களில் வாங்கிக் குவிப்பார்கள்.
அப்படி பேன்சியான, ஜரிகை, பாசிமணி கோத்த வேலைப்பாடுகள் கொண்ட சேலைகள், லெஹங்கா என்றாலே இப்போது மக்களிடையே நினைவுக்கு வரும் பிராண்டு மான்யவார்.
இது உண்மையான வெற்றியின் ஓர் அடையாளம். இதன் வெறறிக்கும் பிரபலத்துக்கும் பாரம்பரியப் பெருமைக்கும் காரணமானவர் பெயர் ரவி மோடி.
வேதாந்த் பேஷன்ஸ் கம்பெனி பல பிரபலமான பிராண்டுகளான மான்யவார், மோஹி, மந்தன், மெபாஸ், டிவாமெவ் போன்ற அனைத்தையும் உருவாக்கியவர் இந்த ரவி மோடி. 2022இல் பங்குச் சந்தையில் தனது நிறுவனத்தைப் பட்டியலிட்ட மோடி இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராக கடந்த ஆண்டு உருவெடுத்தார்.
ரவி மோடி தனது தந்தையின் ஜவுளிக் கடையில் 13 வயதில் ஒரு சேல்ஸ்மேனாக வேலை பார்த்தார். சில ஆண்டுகளில் அவர் கடையின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். 2002 ஆம் ஆண்டில் வேதாந்த் பேஷன்ஸ் என்ற நிறுவனத்தைத் தனது மகன் பெயரில் கொல்கத்தாவில் தொடங்கினார்.
இந்த நிறுவனம் இந்திய பாரம்பரியமான ஆடைகளை மிகவும் நேர்த்தியாகவும், உயர் தரத்திலும் தயாரித்தது. வெறும் ரூ.10,000யை தனது தாயாரிடம் கடனாக வாங்கி இந்த நிறுவனத்தை ரவி மோடி தொடங்கினார்.
அதன் பின்னர் அவர் இந்திய ரக ஆடைகளை தயாரித்து நாடு முழுவதும் மார்க்கெட்டிங் செய்தார். மான்யவார் பிராண்டை பிரபலப்படுத்தனார். மோடியின் வியாபார வளர்ச்சி அவரை மென்மேலும் பல இலக்குகளை நோக்கி கொண்டு சென்றது.
இதைத் தொடர்ந்து அவர் பிரத்யேக பிராண்டு கடைகளை அமைத்து தனது தயாரிப்புகளை விற்கத் தொடங்கினார்.
இப்போது, மான்யவார் மிகவும் பிரபலமான இந்திய திருமண ஆடை பிராண்டாக மாறியுள்ளது, ஆண்களுக்கான குர்தாக்கள், ஷெர்வானிகள், ஜாக்கெட்டுகள், பெண்களுக்கான லெஹெங்காக்கள், புடவைகள் மற்றும் நவீன வடிவங்களுடன் கூடிய ஆடைகளுக்கு பிரபலமாக விளங்குகிறது.
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா, ரன்வீர் சிங், ஆலியா பட் மற்றும் கார்த்திக் ஆரியன் போன்ற பிரபலமான பிரபலங்களின் ஆதரவுடன் மான்யவார் பிராண்டின் புகழ் எங்கும் பரவியுள்ளது.
வேதாந்த் பேஷன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 248 நகரங்களில் 662 கடைகளிலும், 16 சர்வதேச கடைகளிலும் விரிவடைந்துள்ளது.
அவரது வணிகத்தின் வானளாவிய வெற்றியின் காரணமாக, ஏப்ரல் 2023 க்குள் மோடியின் நிகர மதிப்பு $2.5 பில்லியனில் இருந்து $3 பில்லியனாக உயர்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் உலகின் பில்லியனர்கள் பட்டியலில் 1,238 வது இடத்தைப் பிடித்தார். அவர் இந்தியாவின் பணக்காரர்களில் 64 வது இடத்தில் 28,000 கோடி நிகர மதிப்புடன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
வேதாந்த் பேஷன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.32,000 கோடியாக உள்ளது அபாரமான சந்தை இருப்புடன் புதுமைகளை அள்ளித் தரும் வேதாந்த் பேஷன்ஸ், மான்யவார் ஆகியவை இந்திய ஃபேஷன் துறையில் நிலையான வளர்ச்சி மற்றும் புரட்சியைக் கொண்டுவர ஆயத்தமாக உள்ளன.