Ravichandran Ashwin: “நாயகன் மீண்டும் வரார்” – மீண்டும் அணிக்கு திரும்பும் அஸ்வின்!
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட்டில் அவர் விளையாட மாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் 4வது நாளில் இந்திய அணியுடன் இணையவுள்ளார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இந்திய கிரிக்கெட் வீரர்களில் தற்போது விவாதிக்கப்படும் வீரர்களில் ஒருவராக இருப்பவர் அஸ்வின். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் இந்த சாதனையை அஸ்வின் படைத்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய 9வது வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் தன் வசப்படுத்தியிருந்தார்.
அஸ்வினுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பிரதமர் வரை இந்தியாவில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இது மட்டும் இல்லாமல் அஸ்வினுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். அஸ்வின் இந்த சாதனையை தனது தந்தைக்கு சமர்பிப்பதாக அறிவித்தார்.
அஸ்வினைச் சுற்றி அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமை சேர்க்கும் வகையிலும் நடைபெற்றுக்கொண்டு இருந்த நிலையில், ராஜ்கோட்டில் இருந்த அஸ்வினுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்தாக கூறப்பட்டது. அந்த அழைப்பில், அஸ்வினின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தது. இதனால் அணி நிர்வாகத்திடம் இந்த தகவலைச் சொன்ன அஸ்வின் உடனே ராஜ்கோட்டில் இருந்து வெளியேறினார். அதாவது போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் அஸ்வின் ராஜ் கோட்டில் இருந்து கிளம்பினார்.