Ravindra Jadeja: ஜடேஜா வந்தால் அக்ஷர், குல்தீப் யாதவ்விற்கு சிக்கல் – இந்திய அணியின் தேர்வு யாராக இருக்கும்?
இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து 3ஆவது போட்டி வரும் 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் காயம் அடைந்த நிலையில், 2ஆவது போட்டியில் இடம் பெறவில்லை.
அவர்களுக்கு பதிலாக ரஜத் படிதார் மற்றும் சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், ரஜத் படிதாருக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கேஎல் ராகுல் 90 சதவிகித உடல் தகுதியை எட்டிய நிலையிலும் கூட அவர் ராஜ்கோட் போட்டியில் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
ஆதலால், அவருக்குப் பதிலாக ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், பிளேயிங் 11ல் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது போட்டியின் போது தான் தெரியவரும். சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால் ரவீந்திர ஜடேஜா 3ஆவது போட்டியில் முழு உடல் தகுதியுடன் களமிறங்க வாய்ப்புகள் இருக்கிறது.
ஜடேஜா அணிக்கு திரும்பினால், அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் படேல் ஆகியோரில் யாருக்கு இடமளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின் வேறு அணியில் இருக்கிறார். அஸ்வின் மற்றும் ஜடேஜா காம்போ தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறது.
அஸ்வின் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார். ஆதலால் முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் என்ற காம்போவில் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.