தொடர் தோல்வியால் ஆர்சிபி அதிரடி முடிவு.. காந்தாரா ஹீரோவை வைத்து வெளியான வீடியோ

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் 2023 வரை 16 ஐபிஎல் தொடர்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் ஒருமுறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பை வென்றதில்லை. மூன்று முறை ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியும் தோல்வி அடைந்தது அந்த அணி.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறவில்லை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இந்த நிலையில், இதற்கு முன் பல ஐபிஎல் அணிகள் கையாண்ட உத்தி ஒன்றை பயன்படுத்த முடிவு செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

மார்ச் 19 அன்று தங்கள் அணியின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம். அதற்காக காந்தாரா திரைப்படத்தின் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டியை வைத்து விளம்பரம் ஒன்றை தயாரித்துள்ளது. அதில் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்” என்ற மூன்று வார்த்தைகள் எழுதப்பட்ட தனித்தனி சால்வைகளை மூன்று மாடுகளின் மீது போர்த்தி இருக்கிறார்கள். அதில் “பெங்களூர்” என்ற சால்வையை அணிந்து இருக்கும் மாட்டை மட்டும் விரட்டி விடுகிறார் ரிஷப் ஷெட்டி. பின்னர், “என்ன இப்போது புரிகிறதா?” என அவர் கேட்கிறார்.

இந்த விளம்பரத்தின் மூலம் பெங்களூர் என்ற வார்த்தையை “பெங்களூரு” என மாற்ற உள்ளதாக சூசகமாக கூறி இருக்கிறார்கள். இந்த பெயர் மாற்றம் கடந்த 2014ஆம் ஆண்டே நடந்து இருக்க வேண்டிய ஒன்று. ஆனால், சுமார் 9 ஆண்டுகள் கழித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இப்போது பெயரை மாற்ற உள்ளது.

2008ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உருவாக்கப்பட்ட போது கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூர் என்றே அழைக்கப்பட்டது. ஆனால், 2014 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போதே கன்னட அமைப்புகள், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பெயரையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தன. ஆனால், அதை கண்டு கொள்ளவில்லை.

தற்போது தொடர் தோல்விகளால் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதற்கட்டமாக மற்ற ஐபிஎல் அணிகளைப் போல பெயரை மாற்றிப் பார்க்க முடிவு செய்துள்ளது. இனி “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” என அந்த அணி அழைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *