WPL இறுதி போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி.. மும்பை இந்தியன்ஸ் பரிதாபம்.. ஸ்மிருதி படை அபாரம்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு மும்பை அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் முறையாக தகுதி பெற்றிருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தியது.
ஆர் சி பி அணியின் ஸ்மிருதி மந்தனாவும், மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுரும் நேருக்கு நேர் மோதுவதால், இந்த போட்டியை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தானா 10 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் மற்றொரு தொடக்க வீராங்கனையான சோபி டிவைன் 10 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று திஷா டக் அவுட்டாகி பெவிலின் திரும்ப ரிச்சா கோஸ் 14 ரன்கள் எடுத்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் தனி ஆளாக நின்ற ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார்.
இதில் 8 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் rcb அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எளிய இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
எனினும் யாஷிகா பத்தியா 19 ரன்களிலும்,ஹேலி மேத்தீவ்ஸ் 15 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்மன்பிரித் கவுர், நாட் சிவியர் ஜோடி சேர்ந்து விளையாடினர். இருவரும் சேர்ந்து மேட்சை முடித்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நாட் ஸ்வியர் 23 ரன்களில் வெளியேறினார்.கடைசி மூன்று ஓவர்களில் 20 ரன்கள் தான் எடுக்க வேண்டும் என எளிய இலக்கு மும்பை அணிக்கு இருந்தது.
ஆனால் ஹர்மன்பிரித் கவுர் 18 வது ஓவர் கடைசி பந்தில் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு களத்தில் அமீலா கேர் என்ற நட்சத்திர வீராங்கனை இருந்தாலும், மற்ற வீராங்கனைகள் சொதப்பினர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி முதல் முறையாக இறுதி சுற்ற்கு செல்கிறது. இறுதிப் போட்டியில் அவர்கள் டெல்லி அணியை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கின்றனர்.