எல்லை மீறிப் போன ஆர்சிபி.. வேடிக்கை பார்த்த அம்பயர்.. தவித்த சிவம் துபே.. என்ன நடந்தது?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் எல்லை மீறி பந்து வீசினர். பல பந்துகள் வைடாக சென்றது. ஆனால், அதற்கு வைடு தராமல் அம்பயர்கள் வேடிக்கை பார்த்தனர்.
குறிப்பாக சிஎஸ்கே அணியின் இம்பாக்ட் வீரர் சிவம் துபே வுக்கு பவுன்சர் பந்துகளை அடித்து ஆடுவதில் சிக்கல் இருந்ததால் அனைத்து ஆர்சிபி வீரர்களும் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் வீசலாம் என்ற புதிய ஐபிஎல் விதியை பயன்படுத்தினர்.
2024 ஐபிஎல் தொடரில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்க வேண்டும் என்பதால் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் வீசலாம் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதை இந்த ஆண்டின் முதல் போட்டியிலேயே முழு வீச்சில் பயன்படுத்தியது ஆர்சிபி அணி.
இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி நிர்ணயித்த 174 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி ஆடியது. அப்போது 10.2 ஓவர்களில் 99 ரன்கள் குவித்து 3 விக்கெட்களை இழந்து இருந்தது சிஎஸ்கே. அதன் பின் டேரில் மிட்செல் – சிவம் துபே பேட்டிங் செய்தனர்.
அப்போது ஆர்சிபி அணியின் அல்சாரி ஜோசப் பவுன்சர் பந்துகளாக வீசினார். பந்து தலை அளவுக்கு செல்லாமல் வீசிய அவர் இரண்டு பவுன்சர்களுக்கும் அதிகமாகவே வீசினார். அந்த ஓவரில் பவுண்டரி அடிக்க முடியாமல் தவித்தனர். அதன் பின் மிட்செல், கிரீன் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஜடேஜா – சிவம் துபே பேட்டிங் செய்த போதும், சிவம் துபேவை வீழ்த்த பவுன்சர் பந்துகளாக வீசித் தள்ளியது ஆர்சிபி அணி. அப்போது ஒரு முறை அவரது தலைக்கு மேல் பந்து சென்றது. பவுன்சர் என்றாலும் கூட தலைக்கு மேல் பந்து சென்றால் அது வைடாக கருதப்படும். ஆனால், அம்பயர் வைடு தரவில்லை.
அம்பயர் கண்டு கொள்ளாத நிலையில் ஆர்சிபி அணி தொடர்ந்து பவுன்சர்களை வீசியது. அதில் சில முறை விக்கெட் கீப்பரால் பந்தை பிடிக்க முடியாமல் போகவே கூடுதல் ரன்கள் கிடைத்தது. இதனிடையே சிவம் துபே பவுன்சர் அல்லாத பந்துகளை பவுண்டரிக்கு விரட்டத் துவங்கினார். இதை அடுத்து சிஎஸ்கே அணி 18.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. ஜடேஜா 25, சிவம் துபே 34 ரன்கள் எடுத்து இருந்தனர்.
ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் என்ற விதி இந்த ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், முதல் போட்டியிலேயே அதை ஆர்சிபி அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி இருக்கிறது.