தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி சரிபார்க்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் ..!
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அசோக்குமார், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி அந்த தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது., “வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், அரசு இயந்திரத்தை தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியும் தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும், வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்தும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பை மீறி செலவழித்தும், வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை” இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நடைபெற்றது. இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ அசோக்குமாரின் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மீண்டும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று திமுக வேட்பாளர் செங்குட்டுவன் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீது உத்தரவு வழங்கிய நீதிபதி பி.டி. ஆஷா நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி சரிபார்த்து அறிக்கை அளிக்க வேண்டும். மேலும், இதற்காக உயர்நீதிமன்ற தலைமையில் ஒரு பதிவாளர் நியமிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை முடித்து 20 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.