|

குடியரசு தின விழா 2024 | சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுக்கு அழைப்பு

எதிர்வரும் குடியரசு தினவிழா 2024-ல் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைப்பது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த 2021 மற்றும் 2022-ல் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை.

நடப்பு ஆண்டில் (2023) குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் ஃபதா அல்-சிசி பங்கேற்றார். அதற்கு முன்னதாக 2020-ல் அப்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2019-ல் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, 2018-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள், 2015-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2014-ல் அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ, 2013-ல் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் மட்டுமல்லாது நெல்சன் மண்டேலா, ஜான் மேஜர், முகமது கடாமி மற்றும் ஜாக் சிராக் போன்ற உலக நாடுகளின் தலைவர்களும் இதற்கு முன்னர் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2024 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை மாதம், பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இம்மானுவேல் மேக்ரன், தங்கள் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருதை வழங்கி கவுரவித்தார். இதற்கு முன் இந்த விருதை, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, இங்கிலாந்தின் தற்போதைய அரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *