மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
மியன்மார் எல்லையில் தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்படும் இணையக்குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கை இளைஞர்கள் தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையானது நேற்று(29.01.2024) முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டாய உழைப்பு
தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்ப வேலைகள் வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட இந்த இளைஞர்கள் தற்போது சீன பாதாள உலக குழுக்கள் மற்றும் உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கட்டாய உழைப்பு மற்றும் உளவியல் அதிர்ச்சியை எதிர்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த இளைஞர்களின் பெற்றோர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று, தமது பிள்ளைகளின் விடுதலைக்காக உடனடியாக தலையிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
தமது குழந்தைகள் மனரீதியாக உடைந்துள்ளனர், அதிகரித்து வரும் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நிலைமைகளுக்கு ஆளாகின்றனர்.
மிருகத்தனமான தண்டனைகள்
ஒரு தூதுக்குழுவை அனுப்பி அவர்களை வீட்டிற்கு அழைத்து வருமாறு தாம் அரசாங்கத்திடம் கோருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தூக்கமின்மை, மிருகத்தனமான தண்டனைகள் மற்றும் சிறிய மீறல்களுக்கு கூட மின்சாரம் பாய்ச்சுதல் ஆகியவற்றுடன் தினமும் 18 மணிநேரம் வரை கட்டாய உழைப்பு போன்றவற்றில் குறித்த இலங்கையர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடிப்படை சுகாதாரம் மறுக்கப்பட்டுள்ளது, ஒரே மாதிரியான ஆடைகளை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அங்கு உள்ளவர்கள் அனைவரும் தைரியத்தை இழந்துவிட்டதாக குறித்த முகாமில் உள்ள பெண் ஒருவர் வெளியிட்ட தகவல்களை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.