குரோம்பேட்டையில் தலைகீழ் மாற்றம்.. பல்லாவரம் டூ தாம்பரம் வாகன ஓட்டிகளை திகைக்க வைத்த போலீஸ்
சென்னை : சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து போலீசார் மிகப்பெரிய மாற்றத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதன் காரணமாக தாம்பரம் வழியாக சென்னையை விட்டு வெளியே செல்வோரும், சென்னைக்குள் பல்லாவரம் வழியாக உள்ளே செல்ல நினைப்போரும், பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளார்கள்.
சென்னை என்றால் ஒரு காலத்தில் விமான நிலையம் முன்பு உள்ள பகுதிகள் தான். விமான நிலையத்தை கடந்துவிட்டால் சென்னை கிடையாது. சென்னையின் புறநகர் பகுதிகளாக விமான நிலையத்தை அடுத்து உள்ள பல்லாவரம்,குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் போன்றவை இருந்தன. ஆனால் வேளச்சேரியில் ஏற்பட்ட ஐடி துறை வளர்ச்சி தென்சென்னையை அப்படியே புரட்டி போட்டது. குறிப்பாக குரோம்பேட்டையில் இருந்து துரைப்பாக்கத்திற்கு 11 கிலோ மீட்டர் நீளத்திற்கு போட்ட ரேடியல் சாலை, அதாவது 200 அடி சாலை தென்சென்னையில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
சென்னையின் இரண்டாவது ஐடி காரிடர் சாலையான இந்த ரேடியல் சாலை காரணமாக குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்தன. ஐடி நிறுவனங்களில் வேலை செய்வோர் பலர் தாம்பரத்தை சுற்றி குடியேறினார்கள். இதனால் கடந்த 20 வருடங்களில் குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டு வரை சென்னை மாநகரம் பரந்து விரிந்தது. குரோம்பேடை, பல்லாவரம் சென்னையின் முக்கியமான இணைப்பு பகுதியாக மாறின.
இதனால் ஜிஎஸ்டி சாலையில் வரலாறு காணாத அளவிற்கு வாகனங்கள் அதிகமாகி விட்டது. 10 நிமிடம் மாலை நேரங்களில் வாகனங்கள் ஸ்தம்பித்தால் மொத்த சென்னையும் முடங்கும் அளவிற்கு முக்கியமான இடங்களாக குரோம்பேட்டையும் பல்லாவரமும் உருவெடுத்தன. இன்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகள் என்றால் பல்லாவரமும், குரோம்பேட்டையும்தான். அதற்கு காரணம்.. அங்கு உள்ள சிக்னல்கள் தான். குரோம்பேட்டை துரைப்பாக்கம் மேம்பாலத்திலேயே சிக்னல் போடும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது.
இது ஒருபுறம் எனில் சென்னையில் தி நகரை போல், வணிக தளமாக குரோம்பேட்டை உருவெடுத்தது. இதற்கு காரணமும் இருக்கிறது. சென்னையில் ஓஎம்ஆர், வேளச்சேரியை இணைக்கும் பகுதியாக குரோம்பேட்டை இருப்பதுடன், ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் வணிக நிறுவனங்கள் அத்தனையும் சொல்லி வைத்தார் போல், துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம் முதல் குரோம்பேட்டை ரயில் நிலையம் இடையே அமைந்தன.
இதனால் திநகர் போல் குரோம்பேட்டை மாறிவிட்டது. பல லட்சம் பேர் சென்னைக்குள் வரும் இந்த சாலை காலை மாலை வேளைகளில் மூச்சுவிடக்கூட முடியாத அளவிற்கு திணறி வருகிறது.