Rice Price: பாரத் பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசி ரூ.25க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்…. அரிசி விலை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை…
இந்தியாவில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தன. அதன் ஒரு பகுதியாக பாரத் பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசியை ரூ.25க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலமாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு நம்புகிறது. இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (Nafed), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மூலம் இந்த குறைந்த விலை அரிசி விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
பாரத் பிராண்டின் கீழ் மத்திய அரசு ஏற்கனவே கோதுமை மாவு, பருப்பு வகைகளை விற்பனை செய்து வருகிறது. இதில் தற்போது அரிசியும் சேர்க்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் தானியங்களின் விலை 10.27% உயர்ந்துள்ளது. உணவுப் பணவீக்கம் நவம்பரில் 8.70% ஆக அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 6.61%மாக இருந்தது.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தானியங்களின் விலை தொடர்ந்து அதிகரித்தால் அது மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் தானியம் மற்றும் அரிசியின் விலையை குறைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.