தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் அரிசி விலை கடும் உயர்வு: மக்கள் அவதி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமானதால் நெல் விளைச்சல் குறைந்தது.
இந்நிலையில் தஞ்சாவூரில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இட்லி அரிசி மற்றும் சாப்பாட்டு அரிசி கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடக வியாபாரிகள் டெல்டா மாவட்டங்களில் போட்டி போட்டுக் கொண்டு நெல்லை வாங்கிச் செல்வதே விலை உயர காரணம் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்ததால் டெல்டா மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் அரிசி வாங்கிச் செல்வதால் விலை அதிகரித்துள்ளது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்று வருவதாலும் அரிசி விலை உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் விளைச்சல் பாதிப்பால் அரிசி விலை அதிகரித்து காணப்படுகிறது.
கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து நெல் வரத்து குறைந்துள்ளதாலும் தூத்துக்குடியில் அரிசி விலை அதிகரித்துள்ளது. 5 கிலோ, 10 கிலோ அரிசி பைகளுக்கு 5% ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.