குமரியில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த அரிசி விலை – எவ்வளவு என தெரியுமா?

தமிழகத்தில் அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சாப்பாடு அரிசி, இட்லி அரிசி, பச்சரிசி உள்ளிட்ட அனைத்து வகை யான அரிசி விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
காய்கறிகளின் விலை ஒரு பக்கம் உச்சத்திற்கு சென்று மக்களை கவலையில் ஆழ்த்தி வரும் நிலையில் அரிசி விலையும் உயர்ந்து வருவது மக்களை அதிர வைத்துள்ளது.
இதுகுறித்து நாகர்கோவில் மார்க்கெட்டில் அரிசி மொத்த வியாபாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது…
சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த மழைவெள்ளம் மற்றும் நெல்வரத்து குறைந்துள்ளதால் அரிசி விலை அதிகரித்துள்ளது. பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசியின் தேவை அதிகரிப்பு மற்றும் குறைந்த உற்பத்தியைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களில் 15 முதல் 20 சத வீதம் வரை விலை அதிகரித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.110 ஆக இருந்த நிலையில் சிறந்த தரமான பாசுமதி அரிசி ரகம் ரூ.150 என்ற விலையில் விற்பனையாகிறது.
குமரி மாவட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பொன்னி மற்றும் செங்கல் பட்டு அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் 26 கிலோ எடையுள்ள பொன்னி அரிசி ஒரு மூடையின் விலை மார்க்கெட்டுகளில் ரூ.1,410-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு மூடையின் விலை ரூ.360 அதிகரித்து ரூ.1,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் செங்கல்பட்டு அரிசி ஒரு மூடையின் விலை ரூ.150 அதிகரித்து ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 5 கிலோ இட்லி அரிசி மூடை மார்க்கெட்டில் ரூ.200-க்கு விற்பனை செய்யப் பட்ட நிலையில், தற்போது ரூ.50 அதிகரித்துள்ளது. மேலும் அரிசியின் விலை கூட வாய்ப்பு உள்ளது\” என்றனர்.