RIP Captain Vijayakanth: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் காலமானார்!

Captain Vijayakanth Passed Away: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தாா். மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார்.

நடிகா் மீசை ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள், சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வளசரவாக்கத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனா். தேமுதிக அலுவலகம், விஜயகாந்தின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

முன்னதாக, மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது என்று தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தாா். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த 12 ஆம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார் . இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் மீண்டும் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று (டிச.28) அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் இன்று காலை (டிச.28) காலமானார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *